கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற சர்வே
Saturday, January 30, 2010
கடையநல்லூர் பாப்பான் கால்வாய் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான சர்வே பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.கடையநல்லூர் கருப்பாநதி அணைகுட்பட்ட பாப்பான் கால்வாய் பகுதிகளில் அதிகமான அளவில் ஆக்கிரமிப்புகள் காணப்பட்டு வருவதால் கால்வாயின் கொள்ளளவு குறைந்துவிட்டதன் காரணமாகவும், கடைமடை வரை பருவமழை காலத்தில் சீரான தண்ணீர் செல்லமுடியாத நிலை இருப்பதாகவும் விவசாயிகள் சார்பில் பரவலாக கூறப்பட்டு வந்தது.குறிப்பாக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேற்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக அகலமாக காணப்பட்ட பாப்பான் கால்வாய் மிகவும் குறுகிய நிலையில் அமைந்திருப்பதாக மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி தென்காசி ஆர்.டி.ஓ. மூர்த்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சம்பத், தாசில்தார் பரமசிவன், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் மதனசுதாகர், வருவாய் ஆய்வாளர் ஆதிநாராயணன், துணை தாசில்தார் பீட்டர், வி.ஏ.ஓ.இசக்கிமுத்து, கருப்பாநதி அணைக்கட்டு நீர்பாசன சங்க தலைவர் ரத்தினவேல்பாண்டியன் மற்றும் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர்.பாப்பான் கால்வாயில் வடபுறம் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு பகுதிகள் நேற்று சர்வே செய்யப்பட்டு குறியீடு செய்யப்பட்டன. தொடர்ந்து தெற்கு பகுதிகளிலும் சர்வே குறியீடு மேற்கொள்ளப்படுகிறது. பாப்பான் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளதால் இன்னும் ஒருசில தினங்களில் புல்டோசர்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment