நல்லூரான கடையநல்லூர்……
Friday, July 16, 2010

ஏக இறைவனின் திருப்பெயரால்….
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர் ஆன்(3:104)
பசுமை படர்ந்த மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், தென்பொதிகைச் சாரலின் இதமான பருவநிலையும், பன்னெடுங்கால சமூக பாரம்பரியமும், போற்றப்படும் பண்பாடும் மானுட வாழ்க்கை சீரோடியங்குவதற்கான ஒழுக்கமாண்புகளும், சமூக கட்டுப்பாடுகளும் ஒரு காலத்தில் ஒருங்கே இணையப் பெற்ற, பெருவாரியான இஸ்லாமிய மக்களை தன்னகத்தே கொண்ட ஒர் ஊராக திகழ்ந்தது நல்லூரான “கடையநல்லூர்”.
பல்சமய மக்களோடு, இஸ்லாமியர்கள் அண்ணன் தம்பிகளாக, தொப்புள் கொடி உறவுகளாக பரஸ்பரம் இன்றளவும் தங்களது பாசப்பிணைப்பை பரிமாரிக் கொள்வது நமதூரின் சமூக ஒற்றுமைக்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக முஸ்லிம்கள் பல குடும்பங்களாக இருந்தபோதிலும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தங்களுக்கென தனித்தனி குடும்பப் பெயர்களை சூட்டிக் கொண்டு தத்தமது குடும்ப நிகழ்வுகளில் உரிமையுடன் பங்கெடுத்து வருவது உறவுமுறைகளுக்கு அளித்துவரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
தொழில்முறையில் நெசவுத்தொழில் பிரதானமானதாக இருந்து, பின்னர் சிங்கப்பூர்,மலேசியா,பினாங்கு,சவுதிஅரேபியா,அமீரகம்,கத்தார்,குவைத் போன்ற நாடுகளுக்கு வாழ்வாதாரம் தேடி இடம்பெயர்ந்த நமதூர்வாசிகளின் முயற்சியால் இறைவன் போதுமான பொருளாதாரத்தை வாரிவழங்கியிருக்கிறான் என்பதை எழுத்துக்களில் சொல்வதை விட சலவைக்கற்கள் பதிக்கப்பட்ட விண்ணுயர்ந்த வீடுகள் நம் நகரின் தெருக்களில் இன்று சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன.
சமூக அமைப்பில், குறிப்பாக முந்தைய தலைமுறை பெண்களிடத்தில் இருந்த கட்டுப்பாடும்,ஒழுக்கமும் எந்தளவிற்கென்றால் பூப்பெய்திய பெண்கள் தங்கள் சுயதேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு கூட தங்கள் பகுதிக்கு அருகில் இருந்த நீர்நிலைகளுக்குக் பகல் நேரங்களில் வெளிவராமல் இருந்த ஒரு காலம். பாக்களத்தில் பாவாற்றும் ஆண்களுக்கு பணிவிடை செய்யும் போது கூட தங்களையும் மறந்து தங்களின் தலையிலிருந்து முக்காடு விலகிட ஒருபோதும் அனுமத்தித்திடாத கட்டுக்கோப்பான இஸ்லாமியத் தாய்மார்களை கொண்டிருந்தது நம் கடையநல்லூர். ஏன்! தனக்கு வாழ்க்கை தருவதற்காக தன்னை கைப்பிடித்த கணவணோடு அவரின் பெற்றோர் முன்னிலையில் கூட பேசிடத் தயங்கிய நாணம் மிகுந்த நற்றாய்மார்களைக் கொண்டிருந்ததும் நமதூரே.
ஆனால் காலச் சக்கரம் சுழலச் சுழல தங்களின் வாழ்க்கை முறையிலும்,வசதி வாய்ப்பிலும் செழிப்புற்ற நமதூரின் கட்டுக்கோப்பிலும்,பண்பாட்டிலும்,ஒழுக்கத்திலும் முன்பிருந்த நிலை அருகிப்போய்விட்டது என்று சொல்வதை விட அறவே இல்லை என்றே சொல்லலாம்.ஆம் சமீபத்திய நிகழ்வுகள் அதைத்தான் பறைசாற்றிக் கொண்டிருகின்றன.
- v பள்ளியில் படிக்கும் மாணவி தன்னுடன் படிக்கும் அந்நிய ஆடவனுடன் ஓட்டம்.
- v திருமணம் செய்து இரு குழந்தைகளுக்குத் தாயானவள் தன்னை விட வயதில் மிகவும் குறைந்த பள்ளி மாணவனுடன் ஓட்டம்.
- v கணவன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் தகாத உறவின் மூலம் குழந்தைக்கு தாயான பெண்(!)
- v இன்னும் கொத்தனார்,பால்க்காரன்,வட்டிக்காரன் மூலம் கற்பை பறிகொடுத்த பெண்கள்…………… என்று நாளுக்குநாள் நீண்டு கொண்டே சென்று இன்று…
- v ’கடனுக்கு வட்டி கற்பு’ என்று ஜுனியர் விகடன் தலைப்பிட்டு ”வட்டிக்கு பணம் கொடுத்து வட்டி கட்ட முடியாததால் கற்பை பறித்ததோடு,அதை தனது அலைபேசியில் பதிந்து அடுத்தவர்க்கும் விருந்தாக்கிய காமுகர்கள்” என்று நமதூர் மானம் கப்பலேற்றப்பட்டுவிட்டது.
இ இது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையானால் எங்குபோய் முடியுமோ என்று சற்று சிந்தித்தால் நம் மனம் பதைபதைக்கும்!!!.எங்கோ நடைபெறுவதாக கேள்விப்பட்டுக் கொண்டிருந்த இத்தகைய நிகழ்வுகளெல்லாம் ஏதோ ஒரு குக்கிராமத்திலோ அல்லது இஸ்லாமிய வாடை நுகரப்படாத ஒரு ஊரிலோ நிகழ்ந்திருந்தால் அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மார்க்கக் கல்விக்கும்,உலகக் கல்விக்கும் சற்றும் குறைவில்லாத அறிஞர்களை அதிகளவில் கொண்ட,இன்னும் சொல்லப்போனால் நமதூர் ஆலிம்கள்,பட்டதாரிகள்,பண்பாளர்கள் இன்று உலகம் முழுதும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்றால் அது மிகையில்லை. அத்தகையவர்களை உருவாக்கிய நல்லூரில் இது போன்ற இழிவான நிகழ்வுகளும்,கேவலமான சம்பவங்களும் நடைபெறும் போது எப்படி சமூக சிந்தனையுள்ளவர்களால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியும். ஆகவே சமூக அக்கறை கொண்டவர்கள் இத்தகைய அவலங்களுக்கு எதிராக வீரியத்துடன் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதுகுறித்து நாம் அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டால் இது போன்ற நிகழ்வுகள் நாளை நம்முடைய வட்டத்தில் கூட நிகழ்திடக் கூடும். அப்போது கைசேதப்படுவதை விட வருமுன் காக்க முயற்சிப்போம்.
"எந்த ஒரு சமுதாயமும் தம்மிடம் உள்ளதை மாற்றிக் கொள்ளாத வரை அவர்களுக்கு வழங்கிய அருளை அல்லாஹ் மற்றுவதில்லை."(அல்-குர் ஆன்:8:53)
இவ்விசயத்தில் நாம் கருத்தில்கொள்ள வேண்டிய சில…
Ø பள்ளி,கல்லூரியில் படிக்கும் நமது பிள்ளைகளுக்கு, கண்டிப்பாக மொபைல் போன் வழங்காதீர்கள்.
Ø வீடுகளில் தொலைக்காட்சி,இணைய வசதி(இண்டெர்நெட்) உள்ளவர்கள், தங்கள் பிள்ளைகள் அதை பயன்படுத்தும் போது கண்காணியுங்கள்.
Ø கேபிள் மூலம் வீடுகளுக்கு வரும் ஆபாசம் நிறைந்த தொலைக்காட்சி சேனல்களை துண்டிக்குமாறு கேபிள் ஆப்பரேட்டர்களை நிர்பந்தியுங்கள்.
Ø தொலைதூரத்தில் படிக்கச் செல்லும் மாணவியர்களை தனியாக பேருந்தில் பயணம் செய்ய ஒருக்காலும் அனுமதிக்காதீர்கள்.
Ø குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வீடுகளிலிருந்து புறப்பட்டாலோ,அல்லது வகுப்புகள் முடிந்து தாமதமாக வீடுதிரும்பினாலோ கல்விநிறுவனங்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேளுங்கள்.
Ø பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர் மீது உங்களின் கழுகுப்பார்வை எப்போதும் இருக்க வேண்டும்.இல்லையேல் அவர்கள் வழிதவற வாய்ப்புகள் அதிகம்.
Ø நமது பெண்கள்,வெளியிலும்,வீட்டுத்திண்ணைகளிலும் அமர்ந்து பேசுவதை தவிர்க்கச் செய்யுங்கள்.
Ø நமது தெருக்களுக்குள் அல்லது அருகிலிருக்கும் வீடுகளுக்குள் அடிக்கடி பிரவேசிக்கும் அந்நியர்களை கண்காணியுங்கள். முடிந்தால் அவர்களை பற்றி விசாரியுங்கள். தக்க காரணங்களின்றி பிரவேசித்தால் அவர்களை சமூக அமைப்புகளிடத்தில் ஒப்படையுங்கள்.
Ø இன்று தலைவிரித்தாடும் வட்டி போன்ற கொடுமைகளால் பெண்களின் கற்பு பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற சகோதரர்கள் இணைந்து வட்டியில்லாக் கடன் திட்டம்,பைத்துல்மால் போன்றவற்றை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
Ø எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு இஸ்லாத்தை போதிக்கும் முகமாகவும்,அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் விதமாகவும் பெண்கள் பயான் மற்றும் தெருமுனைப்பிரச்சாரக் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்.
இதற்கு இஸ்லாம் என்ன தீர்வு சொல்கிறது?
“எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: அஹ்மத் 109)
“ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24:31)
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:32-35)
தீன்குலப் பெண்களாக நமது பெண்கள் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும்,இறையச்சம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும்.
“தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)
நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது. “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “நாவும் பாலுறுப்பும்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)
அல்லாஹ்வும் அவனது தூதரும் சொன்ன அடிப்படையில் நம் வாழ்க்கையை அமைத்து அற்பமான இவ்வுலக இன்பங்களை அசிங்கமான வழிகளில் தேடிக்கொள்ளாமல் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடக்கும் நல்லொழுக்கமுள்ளவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
ஆக்கம்:
இப்னுஸித்திக்,
கடையநல்லூர்

0 comments:
Post a Comment