இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?
Thursday, January 7, 2010
இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில் இணை கற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணை வைப்போர் என்று ஒரு சாரார் இருக்கவில்லை. இணை வைக்கும் செயலும் இருக்கவில்லை. அதாவது இணை வைக்காமல் இருந்தால் தான் முஸ்லிம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) காலத்து நிலைமை.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் சில கிராமவாசிகள் நம்ப வேண்டியவைகளை நம்பாமல் முஸ்லிம்கள் பட்டியலில் இருந்தாலும் அவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்கும் பிரச்சனை எழவில்லை.எனவே நபிகள் நாயகம்காலத்தில் இந்தக் கேள்வியே எழவில்லை.ஆனால் இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றாமல் பரம்பரை அடிப்படையில் முஸ்லிம்கள் உருவான பிறகு அடிப்படைக் கொள்கை தெரியாத ஒரு சமுதாயம் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்குள் கலந்தது. அவர்களிடம் இணை வைப்பும் நுழைந்தது.எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாம் என்றோ பின்பற்றக் கூடாது என்றோ நேரடியாக ஆதாரம் இருக்க முடியாது.
நபிகள் நாயகம் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காதே தவிர எவ்வாறு முடிவு செய்வது என்ற அடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.
நபிகள் நாயகம் காலத்தில் இல்லாத விஷயங்கள் பிற்காலத்தில் தோன்றினால் அதற்கு நேரடி ஆதாரம் இருக்காதே தவிர எவ்வாறு முடிவு செய்வது என்ற அடிப்படை நிச்சயமாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நிலை ஏற்படும் என்று இறைவனுக்குத் தெரியும். எனவே பிற்காலத்தவர்கள் அந்தப் பிரச்சனையைச் சந்திக்கும் போது எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு அடிப்படை உள்ளதா என்ற வகையில் தான் இதை அணுக வேண்டும்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இந்தப் பிரச்சனையை நாம் ஆராய வேண்டும்.
ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون(17)9
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு,தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன்9:17
இணை வைக்கும் இமாமைப் பின்பற்றுவது குறித்து நாம் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனம் வழிகாட்டுகிறது.
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளிவாசலை நிர்வகிக்கக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது.
அன்றைய காலத்தில் பள்ளிவாசல்கள் என்பது கீற்றுக் கூறைகள் தான். அதில் நிர்வாகம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வணக்க வழிபாடுகளுக்குத் தலைமை ஏற்பது மட்டுமே அன்று இருந்த ஒரே நிர்வாகம். இணை கற்பிப்போர் பள்ளியை நிர்வகிக்கக் கூடாது என்றால் அதன் தலைமைப் பொறுப்பு அவர்களிடம் இருக்கக் கூடாது என்பது தான் கருத்தாக இருக்க முடியும். தொழுகையைத் தலைமை தாங்கும் பொறுப்பைத் தான் இது முதன்மையாக எடுத்துக் கொள்ளும்.
எனவே அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் இமாமாக இருக்கக் கூடாது என்பது தெளிவாகத் தெரிகின்றது.அவர்களின் அமல்கள் அழிந்து விட்டனஎன்று அதைத் தொடர்ந்து கூறப்படுவதில் இருந்து அமல்களில் தலைமை தாங்குவதைத் தான் இது குறிக்கிறது என்பது உறுதியாகும்.
இன்னும் சொல்லப் போனால் வெள்ளை அடித்தல், கட்டுமானப் பணி மேற்கொள்ளுதல், மின் இணைப்பு பணி செய்தல், பராமரித்தல் போன்றவை இரண்டாம் பட்சமானது தான். அதற்கான வசதிகள் இல்லாவிட்டால் அதை விட்டுவிடலாம்ஆனால் வணக்க வழிபாடுகளை பள்ளிவாசல்களில் நிறுத்த் முடியாது. எனவே தொழுகை நடத்துவது தான் முதன்மையான முக்கியமான நிர்வாகப் பணியாகும்.
இன்றைய காலத்தில் தான் ஜமாஅத் தொழுகையின் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இமாம் எப்போது வருகிறாரோ அப்போது தான் ஜமாஅத் நடக்கும். தொழுகையின் நேரம் முடிந்து விடும் என்ற நிலையில் மட்டுமே மற்றவர்கள் தொழுகைக்குத் தலைமை தாங்குவார்கள். அதாவது தொழுகையை நடத்தும் இமாமிடம் தான் அதிகாரம் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெளிவாகும்.
எனவே தொழுகைக்குத் தலைமை தாங்கும் உரிமை, தகுதி இணை வைப்பவருக்குக் கிடையாது என்பதற்கு இதை விட வேறு ஆதாரம் தேவை இல்லை. அவர்கள் தலைமை தாங்கக் கூடாது என்றால் அந்தத் தலைமையை நாம் ஏற்கக் கூடாது என்பதைப் புரிந்து கொள்வது எளிதானதே.
لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاة ويحذركم الله نفسه وإلى الله المصير(28)3
நம்பிக்கை கொண்டோர்,நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர் களாக ஆக்கக் கூடாது. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.
திருக்குர்ஆன்3:28
மூமின்களைத்தான் (அதாவது இணைகற்பிக்காதவர்களைத் தான்) தலைவர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்க முடியாத என்ற அச்சுறுத்தல் இருந்தால் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்று இவ்வசனம் கூறுகிறது. அது ஆட்சித் தலைமைக்கு உரியது என்றாலும் அதை விட மேலான வணக்க வழிபாடுகளுக்கு இன்னும் சிறப்பாகப் பொருந்தும்.
பின்வரும் வசனங்களும் இதே கருத்தைக் கூறுகின்றன.
ياأيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون(23)9
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும்,உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்!89உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.
திருக்குர்ஆன்9:23
الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا(139)4
நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை அவர்கள் உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.89கண்ணியத்தை அவர்களிடம் தேடுகிறார்களா?கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.
திருக்குர்ஆன்4:139
ياأيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا(144)4
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?
திருக்குர்ஆன் 4:144
தொழுகையில் நமக்காகவும் அனைவருக்காகவும் பாவ மன்னிப்புக் கோரும் துஆக்கள் உள்ளன. அந்த துஆவில் இமாமும் அடங்குவார். ஆனால் பின்வரும் வசனம் இதைத் தடை செய்யும் வகையில் உள்ளது.
ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم(113)9
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர்,அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும்,இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
திருக்குர்ஆன் 9:113
இணை கற்பிப்பவரை இமாமாக ஏற்றுப் பின்பற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இந்தக் கட்டளை - நபிகள் நாயகத்துக்கும் இப்ராஹீம் நபிக்கும் கூட தளர்த்தப்படாத இந்தக் கட்டளை- மீறப்படும் நிலை ஏற்படும்.
எனவே இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்ற அறவே அனுமதி இல்லை என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த இடத்தில் ஒரு சந்தேகத்தைச் சிலர் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் அனைத்து முஸ்லிம்களுக்கான பல போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில் இணை கற்பிப்பவர்களும் உள்ளனர். அவர்களையும் ஒரு பக்கம் முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொண்டு இன்னொரு பக்கம் இணை கற்பிப்பவர்கள் என்று முத்திரை குத்துவது ஏன்? அவர்கள் பின்னே தொழக் கூடாது என்று கூறுவது ஏன்?
இது தான் அந்தக் கேள்வி. தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் போராடக் கூடாது என்பதற்காக இப்படி கேட்கிறார்களா? அல்லது அவர்கள் பின்னால் தொழலாம் என்று ஃபத்வாவை மாற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார்களா? என்பது நமக்குப் புரியவில்லை.
ஆனாலும் இதற்குப் பதில் சொல்லும் கடமை நமக்கு உண்டு.
இணை வைக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது என்று நாம் ஆதாரத்தின் அடிப்படையில் கூறுவது போலவே அவர்களை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்ப்பதும் ஆதாரத்தின் அடிப்படையில் தான்.
ஒருவர் அல்லாஹ்வின் பதிவேட்டில் முஸ்லிமாக இருப்பது வேறு. உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கப்படுவது வேறு. ஒருவர் உலகில் முஸ்லிம்கள் கணக்கில் சேர்க்கப்பட்டால் முஸ்லிம் என்ற உலக நன்மையை அவரும் பெற்றுக் கொள்வார் என்பதும் இஸ்லாத்தின் நிலைபாடு தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கிராமவாசிகள் இஸ்லாத்தின் கொள்கையை நம்பாமல் தங்களை மூமின்கள் நம்பிக்கையாளர்கள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொண்டனர். இதை அல்லாஹ் கண்டித்து அவ்வாறு கூறக் கூடாது ஆனால் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கிறான்.
''நம்பிக்கை கொண்டோம்''என்று கிராமவாசிகள் கூறுகின்றனர்.''நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. மாறாக'கட்டுப்பட்டோம்'என்று கூறுங்கள்''என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் நீங்கள் கட்டுப்பட்டால் உங்கள் செயல்களில் எதையும் அவன் குறைத்து விட மாட்டான். அல்லாஹ் மன்னிப்பவன்;நிகரற்ற அன்புடையோன்.
திருக்குர்ஆன் 49:14
தமிழாக்கத்தை மட்டும் பார்த்தால் நாம் கூறுவதைப் புரிந்து கொள்ள முடியாது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு மூலத்தையும் கவனித்தால் தான் முழுமையாகப் புரியும்.
கிராமவாசிகள்ஆமன்னாஎனக் கூறினார்கள். இதுஈமான்என்ற சொல்லில் இருந்து பிறந்தது. அதாவது தம்மைமூமின்கள்என்று அவர்கள் வாதிட்டனர்.நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லைஎன்று கூறிஅவர்களிடம் ஈமான் இல்லை என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டுஅஸ்லம்னாஎன்று கூற அனுமதிக்கிறான்.அஸ்லம்னாஎன்பதுஇஸ்லாம்என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். அதாவது வெளிப்படையான செயல்களில் கட்டுப்பட்டோம் என்ற பொருள் தரும் வகையில்அஸ்லம்னா (முஸ்லிம்களாக இருக்கிறோம்)என்று அல்லாஹ் கூறச் சொல்கிறான்.
அவர்களிடம் ஈமான் இல்லாவிட்டாலும் வெளிப்படையாக முஸ்லிம்கள் என்று சொல்லலாம் என்று அல்லாஹ் அனுமதிப்பதை இதிலிருந்து அறியலாம்.
இதே கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் அமர்ந்திருந்த போது,அவர்கள் மக்களில் ஒரு குழுவினருக்கு மட்டும் (தர்மப் பொருட்களை) கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு வேண்டிய ஒருவரை (அவருக்கு கொடுக்காமல்) விட்டுவிட்டார்கள். ஆகவே நான்,அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?)அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி?அல்லாஹ்வின் மீதாணையாக! அவரை நான் நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகின்றேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,அவரை முஸ்லிம் (இறைநெறியில் நடப்பவர்) என்று சொல்என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். தொடர்ந்து நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னையும் அறியாமல் (என் நாவில்) வந்த போது முன்பு சொன்னதையே திரும்பவும் சொன்னேன். அவர் மீது உங்களுக்கு என்ன அதிருப்தி?அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக நான் அவரை ஒரு நம்பிக்கையாளர் (மூமின்) என்றே கருதுகிறேன்என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை முஸ்லிம் என்று சொல்என்றார்கள். அவரைப் பற்றி நான் அறிந்திருந்த விஷயத்தை என்னையும் மீறி மீண்டும் மீண்டும் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழைய பதிலையே கூறிவிட்டு,சஅத்! (அன்பளிப்புகள் எதுவாகட்டும்) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்;ஆனால் நான் யாருக்குக் கொடுக்கவில்லையோ அவர் என் அன்புக்குப் பாத்திரமானவராய் இருக்கிறார். (அவருக்கு நான் கொடுக்காதிருந்தால் இல்லாமையால் அவர் குற்றங்கள் எதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகில் முகம் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான்என்றார்கள்.
புஹாரி 27
உலகில் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு அல்லாஹ்விடம் முஸ்லிமாகக் கருதப்படுவது வேறு என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நாம் தொழுவது போன்று தொழுது,நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி,நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தாம் முஸ்லிம். அத்தகையவருக்கு அல்லாஹ்வின் பொறுப்பும் (காப்புறுதியும்) அவனுடைய தூதரின் பொறுப்பும் (காப்புறுதியும்) உண்டு. எனவே (இப்படிப்பட்டவர் மீது) அல்லாஹ் ஏற்றுக்கெண்டிருக்கும் பொறுப்பி(னைப் பாழாக்கும் விஷயத்தி)ல் அல்லாஹ்வுக்கு(ம் அவனுடைய தூதருக்கும்) வஞ்சனை செய்து விடாதீர்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புஹாரி 391
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என இம்மக்கள் (உறுதி) கூறும் வரை அவர்களோடு போரிடவேண்டுமென நான் பணிக்கப்பட்டுள்ளேன். எனவே இதை அவர்கள் கூறி,நாம் தொழுவது போன்று தொழுது,நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி,நம்மால் அறுக்கப்பட்டதை அவர்கள் புசிப்பார்களேயானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர் உடைமைகள் (மீது கை வைப்பது) நம்மீது விலக்கப்பட்டதாக ஆகிவிடும்;மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புஹாரி 392
மைமூன் பின் சியாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம்,அபூஹம்ஸா! ஓர் அடியாரின் உயிரையும் பொருளையும் தடைசெய்வது எது?என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என உறுதி மொழிந்து,நமது (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கி நாம் தொழுவது போன்றே தொழுது,நம்மால் அறுக்கப்பட்டதைப் புசிக்கின்றாரோ அவர்தாம் முஸ்லிம். மற்ற முஸ்லிம்களுக்கு கிட்டும் லாபமும் அவருக்கு உண்டு;மற்ற முஸ்லிம்களுக்கு ஏற்படும் நட்டமும் அவருக்கு உண்டு.என்று கூறினார்கள்.
புஹாரி 393
ஒருவர் வெளிப்படையான காரியங்களைச் செய்தால் இஸ்லாமிய அரசில் அவர் முஸ்லிமாகக் கருதப்பட்டுவார். அனைத்து முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையைப் பெறுவார் ஆனால் அவர் உண்மையில் மூமினாக இல்லாவிட்டால் அவரைப் பற்றிய விசாரனை அல்லாஹ்விடம் உள்ளது என்று தெளிவுபடுத்துகிறார்கள். இஸ்லாமிய அரசாங்கம் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஈமான் இல்லாத கிராமவாசிகள் முஸ்லிம்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதை அடிப்படையாக வைத்து தன்னை முஸ்லிம் என்று சொல்பவரை உலகக் கணக்கில் முஸ்லிம்கள் பட்டியலில் நாமும் சேர்க்க வேண்டும்.
நபிகள் நாயகத்துக்குப் பின் இன்னொருவரை நபி என்று ஏற்றுக் கொண்டவர்கள் இதில் அடங்க மாட்டார்கள். அவர்கள் தனி மதத்தவர்களாவர். காதியானி 19 கூட்டத்தினர் இதில் அடங்க மாட்டார்கள்.
அதே சமயம் இணை கற்பிப்பவர்களை இமாமாக ஏற்கக் கூடாது; இணை கற்பிப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது; இணை கற்பிப்பவருக்கு பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது போன்ற கட்டளைகளையும் பேணிக் கொள்ள வேண்டும். உலக விஷயங்களில் உலக உரிமைகளில் முஸ்லிம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டால் அவரை முஸ்லிம்கள் பட்டியலில் சேர்க்கவும் வேண்டும். இரண்டுமே ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு தான்.
0 comments:
Post a Comment